மட்டக்களப்பில் அருட்தந்தை ஒருவர் தான் விரைவில் சுட்டுக் கொலை செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளமை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அருட்தந்தையர்களுக்கான விசேட திருப்பலி ஒன்று ஆயர் தலைமையில் மட்டக்களப்பு ஆயரில்லத்தில் இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் அருட்தந்தை ஒருவர் தனக்கு ஆயரில்லத்தில் உள்ள சிலரால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் குறித்து அருட்தந்தையர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டதுடன் என்னை துப்பாக்கி முனையில் கொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அருட்தந்தை கருத்து தெரிவித்த காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது,
அந்த காணொளியில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் என் மீது குரோத உணர்வை கொண்டுள்ளதுடன், மறைமாவட்டம் மீது கரிசனையுடன் நல்ல விடயங்களை கூறும் மதகுருமாரை வெறுக்கின்றார்.
நான் உயிரிழந்தால் வெறுமனே புதைத்துவிட்டு சென்றுவிடாதீர்கள். ஏன் இறந்தேன் என்பதை விசாரணை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மறைமாவட்ட நிர்வாகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய குறித்த அருட்தந்தை பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதன் காரணமாக தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய ஆதாரங்களை அழித்து விட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
எங்களை கொலை செய்ய பார்க்கின்றீர்களா..??
இவ்வாறான ஒரு ஆபத்தான நிலையில் தாம் இருப்பதாக கூறிய அருட்தந்தை, மரணித்தால் அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் புனித வாரம் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கக்கூடிய காலத்தில் அருட்தந்தை ஒருவர் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை தாம் கொலை செய்யபடலாம் என்று கருத்து வெளியிட்டுள்ளமை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அருட்தந்தையர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.