ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ்,பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி ரோமில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அதன்படி, ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் உள்ள 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவியுள்ளார்.
இந்த சடங்கானது நேற்று (29) இரவு ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் போப் பிரான்சிஸ் அவர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதங்களுக்கு முத்தமிட்டார்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூரும் விதமாகவே இந்த சடங்கு நிகழ்ச்சி இடம்பெற்றது.
12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவிய பின்னர் போப் பிரான்சிஸ் கைதிகளின் பாதங்களுக்கு முத்தமிட்டார்.
வழக்கமாக இதற்கு முன்னர் போப் ஆக பதவி வகித்தவர்கள் வத்திக்கான் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
முதன் முறையாக
ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக சிறையில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார்.
இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.