தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை அவர்கள் அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தேசிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிபர் தேர்தலில் பொது வேட்பாளர்
”எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது. அத்துடன் குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை.
தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். அவ்விதமான நிலையில் அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.
அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம்.
இந்திய, இலங்கை ஒப்பந்தம்
எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிவருகின்றார்கள்.
அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும்“ என தெரிவித்தார்.