சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச புவி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு உலக புவி தினத்தின் தொனிப்பொருள் “பூமி மற்றும் பிளாஸ்டிக்” (Planet vs Plastics) என்பதாகும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி
அத்துடன் 2040ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியையும் 60% குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதனால் புவியின் வெப்பநிலை அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் புவி தினம்
ஏப்ரல் 22, 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் புவி தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று, புவி தினத்தில் சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க 193 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1 பில்லியன் மக்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இதேவேளை சர்வதேச புவி தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் பிரத்தியேக டூடுலை (Doodle) உருவாக்கியுள்ளது.
புவி தினத்தின் கருப்பொருளான உலகின் இயற்கை வளத்தின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், தனிச்சிறப்பு மிக்க உயிரினங்களை தேர்வு செய்து அவற்றை தனது முகப்பு சித்திரத்தில் இடம்பெற வைத்துள்ளது.