அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய நாடுகடத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தாங்கள் சிறைக்கு செல்லவேண்டியேற்பட்டிருக்கும் என்று நீண்ட சட்டப்போராட்டத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையின் தமிழ் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த குடும்பமானது அவுஸ்திரேலிய பிலோவாலில் (Biloela) தங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
சட்ட முயற்சிகள்
மேலும் தெரிவிக்கையில்,“குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், நாம் சிறையில் அடைக்கப்பட்டிப்போம். அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு சிறுமிகளும் இலங்கைக்கு செல்ல மறுத்ததால் எம்மிடம் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்.
2019ஆம் ஆண்டு, கடந்த அரசாங்கம் தமது குடும்பத்தினரை இலங்கைக்கு விமானத்தில் ஏற்றிய போது, நாங்கள் அச்சமடைந்தோம். இலங்கையில் எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் இருந்தது.
எனினும், தொடர்ச்சியான சமூக போராட்டங்கள் மற்றும் சட்ட முயற்சிகளுக்கு பின்னர் 2022இல் நாம் பிலோலாவுக்கு திரும்பியுள்ளோம்.
இந்நிலையில் இடம்பெயர்வுச் சட்டம் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு “சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாதவர்கள் விடயத்தில் கொடூரமானது.
எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. அல்பானீஸ் அரசாங்கம் இந்த கொடுமையை நிறுத்த வேண்டும், மேலும் இந்த யோசனையை கைவிட வேண்டும். இதன் காரணமாக தம்மை போல பல குடும்பங்கள் பாதிக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், குடும்பம் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காக போராடியதால் “பிலோலா குடும்பம்” என்று பொதுவில் அழைக்கப்படுகிறது
கூட்டணியின் ஆதரவு
முன்னதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு பண்டிகைக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டத்தை நிறைவேற்ற முயன்றது, ஆனால் கூட்டணியின் ஆதரவைப் பெற முடியவில்லை, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களை நாடு கடத்தும் செயல்முறைக்கு வழியை ஏற்படுத்தியிருக்கும்.
அத்துடன் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படும் அபாயத்தையும் ஏற்படு;த்தியிருக்கும் என்று சட்டவாதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குடியேற்ற தடுப்புக்காவலில் உள்ள சுமார் 150 பேர் மீதே இந்த யோசனை கவனம் செலுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது, எனினும் இந்த யோசனை பிரிட்ஜிங் விசாவில் சமூகத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கலாம் என்ற தீவிர அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதில் 2012 அல்லது 2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற 10,000 பேர் உள்ளடங்குவர்.