நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், பல்வேறு முரண்பாடுகள் காரணமாக இது தொடர்பில் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பீரிஸ் கடும் ஆட்சேபம்
மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வேளையில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது பொருத்தமானதல்ல என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஸ்மன் கிரியெல்ல(Lakshman Kiriella) மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(professor GL Peiris) ஆகியோர் குழுவில் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.அங்கு கிரியெல்லவின் ஆட்சேபனையை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்
அண்மையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 116 பேர் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் கோரி சபாநாயகரிடம் ஆவணம் ஒன்றை கையளித்தனர்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார், அங்கு இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதிலும் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை.