அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நாடு இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது. நாடென்ற ரீதியில் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. அதற்கு தொழிற்சங்க அமைப்புகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து லெஸ்லி தேவேந்திரவின் தொழிற்சங்க பணிகளுக்கு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஊழியர் மையம்
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வேலைத் திட்டத்திற்காக அனைத்து தொழிற்துறையினரதும் கருத்துக்களைப் பெறவும் கலந்துரையாடவும் எதிர்காலத்திற்குப் பொருத்தமான தொழிலாளியை உருவாக்குவதற்கும் “ஊழியர் மையம்” ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளது.
அதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ஒரு தொகை பணத்தை ஒதுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வங்கித்துறை உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் அரசாங்கத்தின் பலத்தை வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புதிய சட்டங்கள்
நாட்டின் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, 2027 வரை வெளிநாட்டுக் கடனைச் செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியாக பணிப்பாளர் சபைகளை நியமிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது.
முறையான திட்டத்தினூடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை எனவும் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், தனியார் துறையிலும் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களுக்கு சலுகை
இவ்வருடம் அதிக நிவாரணங்களை வழங்குவதற்கான பொருளாதார பலம் எம்மிடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும்.
இதற்காக அரச துறையின் அனைத்து துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.