யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியில் வைத்து பூட்டப்பட்ட 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த மர்மநபரொருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் கண்காணிப்பு கெமராவின் காணொளியை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர் சாவல்கட்டு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணையில் குறித்த சந்தேக நபர் 30,000 ரூபா பணத்திற்கு ஆறுகால்மடத்தைச் சேர்ந்தவருக்கு கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்தமை தெரியவந்தது.
இதனையடுத்து கையடக்கத் தொலைபேசியை வாங்கியவரும் கைது செய்யப்பட்டு கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, கையடக்கத் தொலைபேசியை திருடியதாக கருதப்படும் சந்தேகநபர் சைக்கிள் திருட்டுகளில் ஆறுமாதகாலம் தண்டனை பெற்று விடுதலையானகரென பொலிஸார் தெரிவித்தனர்.