அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைப் பிரிவுகளுக்கிடையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து உரிய கவனம் செலுத்தி பரிந்துரைகள் சமர்ப்பிக்குமாறு அந்த குழுவிற்கு ரணில் அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அதிபர் செயலாளர் உதய செனவிரத்னவின் (Udaya Senaviratna) தலைமையிலான நான்கு பணிப்பாளர் நாயகங்களும் நான்கு உறுப்பினர்களும் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரச சேவையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை நிபுணர் குழு சமர்ப்பிக்கும்.
இது தொடர்பான தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 03 மாதங்களுக்குள் அதிபருக்கு வழங்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மேலதிக நிதி ஆதாரங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினால் தற்போது முடியவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.