நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் எட்டு மில்லியனாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தினசரி முட்டை நுகர்வு ஏழு மில்லியன் என்று நுகர்வோர் தரவு அறிக்கைகள் குறிப்பிட்டாலும் கடந்த சில மாதங்களில் குறித்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நாளாந்த முட்டை உற்பத்தி சுமார் ஆறு மில்லியனாக உள்ளதுடன் தேவைக்கும் மற்றும் வழங்கலுக்கும் இடையில் சுமார் இரண்டு மில்லியன் முட்டைகளின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் முட்டை சந்தையில் கேள்வி நிலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முட்டை இறக்குமதி
அத்தோடு, முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் ஊடாக இலங்கை சந்தையில் முட்டை விலை வேகமாக அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் கோழி குஞ்சுகளின் வருடாந்தத் தேவை 44,000 முட்டைகளால் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியாளர்கள் சங்கம்
இதனடிப்படையில், கடந்த வருடங்களில் இந்தத் தேவை சுமார் 80,000 ஆக இருந்தது என்றும் இந்த ஆண்டு 122,000 குஞ்சுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரான்ஸ் (France), அமெரிக்கா (America), இந்தியா (India) மற்றும் பிரேசில் (Brazil) ஆகிய நாடுகளில் இருந்து தாய் கோழி குஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.