பேலியகொட மத்திய மீன் சந்தையில் உண்பதற்கு பொருத்தமற்ற மீன்களை விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடரில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர், நாரா நிறுவனம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் 17ஆம் திகதி பேலியகொட மத்திய மீன் சந்தையின் முகாமையாளர்கள் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், அதில் பழுதான மீன்கள் மற்றும் தகாத மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, நாரா நிறுவனம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களிடம் அறிக்கைகளை கோருவதற்கு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் முகாமைத்துவ அறக்கட்டளையின் தலைவி குமாரி சோமரத்ன தீர்மானித்துள்ளார்.
மேலும், பேலியகொடை மத்திய மீன் சந்தை வளாகத்தில் 154 மொத்த விற்பனை கடைகளும் 124 சில்லறை மீன் கடைகளும் உள்ளதாக பேலியகொட மத்திய மீன் மொத்த வியாபார சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அப்பகுதியில் அப்புறப்படுத்தப்படும் அழுகிய மீன்களை சேகரித்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்று இருப்பதாகவும், இது தொடர்பில் தொழிற்சங்க நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.