சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், இல்லையேல் காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான புரிதல்கள்
மேலும் அந்த அறிக்கையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டதன் பின்பு ஏற்பட்ட பிரச்சினைகள் யாவரும் அறிந்த ஒன்று.
இவ்விடயம் தொடர்பான தவறான புரிதல்கள் பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதனால் அது பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். தனிப்பட்ட ஒரு மருத்துவரின் நிர்வாகம் சார்ந்த பிரச்சினை ஒட்டுமொத்த வைத்திய சமூகத்தையும் பாதித்துள்ளது.
எனவே உண்மை நிலையை எடுத்துரைப்பதோடு அறிவுக் கண்கொண்டு இவ்விடயத்தை பொதுமக்கள் அணுக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவியேற்ற பின்னர் அங்கு கடமையாற்றிய அனைத்து வைத்தியர்களும் ஒருமித்த குரலில் வைத்தியசாலையை விட்டு வெளியேறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்றும் காலக்கெடு இன்றி விடுதியில் இருந்து கடமையாற்றிய வைத்தியர்களை உடனடியாக வெளியேற்றும் சர்வாதிகார முறையினை பிரயோகித்தது சரியா எனவும் நீங்கள் ஏன் சிந்திக்க மறந்தீர்கள் ?
ஒரு வைத்தியராக நோயாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பான சிகிச்சையை வழங்க முடியாமல் போகும் பட்சத்தில் தொடர்ந்து அங்கு பணியாற்றுவது என்பது முடியாத ஒன்று. நோயாளர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கு பணியாற்ற முடியாத நிலைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மனிதாபிமானம் அற்ற முறை
அதே நேரம் உடனடியாக பணிப்புறக்கணிப்பையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. தான் கடமையேற்ற இரண்டு மணித்தியாலங்களில் வைத்தியர்கள் தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியேறுமாறு அவர் பணித்துள்ளார்.
மகப்பேற்று விடுமுறையில் இருந்தவர்கள் என்று கூடக் கருதாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் கட்டாய இடமாற்றத்திற்கு வைத்தியர்களை உள்ளாக்கியுள்ளார். வைத்தியர்களது மூடப்பட்டிருந்த விடுதிகளை உடைத்து தன்னகப்படுத்தியுள்ளார்.
இவரது அதிகார தோரணைகளையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்ட வைத்தியர்களை உளரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் படியான தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசியதுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய இடமாற்றங்களையும் வழங்கியுள்ளார். இதனால் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியர்கள் மீது இவர் கொண்டிருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளே இவரது சர்வாதிகாரத்தனமான செயற்பாடுகளுக்குக் காரணமாகியுள்ளது. இவற்றை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி பொறுமை காத்து வந்தனர் சாவச்சேரி வைத்தியர்கள்.
அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகளை மின் பிறப்பாக்கி வசதியற்ற கட்டடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளையில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே பாதுகாப்பாக இக்கட்டடத்தை மீள ஆரம்பிப்போம் இல்லையெனில் அதற்கான மாற்று ஏற் பாடுகளை மேற்கொள்வோம் என வைத்திய நிபுணர்கள் அறிவுரை கூறியபோதும் அவசர அவசரமாக தன்னிச்சையான முடிவுகளை எடுத்து இடமாற்றியுள்ளார்.
பொறுப்பற்ற செயல்
இரண்டாம் மாடிக்கு மாற்றப்பட்ட மகப்பேற்று விடுதிக்குப் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணியை மின்தடை காரணமாக மேலெடுத்துச் செல்ல முடியாத நிலையில் சாதாரணமாக மேற்கொள்ள வேண்டிய பிரசவத்தையும் செய்ய முடியாத நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வழமையாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசவத்தையும் அங்கு நடத்த முடியாதவாறே இவர் பணியாற்றியுள்ளார்.
இவற்றையெல்லாம் ஏற்கனவே எதிர்வுகூறித் தான் வைத்திய நிபுணர்கள் அவருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கியிருந்தனர். இவரது பொறுப்பற்ற செயல்களினால் பாதிக்கப்பட்டது பொதுமக்களே.
இதன் பின்பே வைத்தியர்கள் தங்களது பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளரை அணுகினர். அவர்களும் அங்கு விஜயத்தை மேற்கொண்டு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மாகாணப் பணிமனைக்கு மாற்றலாகுமாறு பணித்து இருபத்தினான்கு மணி நேரம் நிறைவுற்றும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதால் தொழிற்சங்கமாகிய அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாட்டிற்குள்ளாக்கப்பட்டோம்.
நாம் நமது தொழிற்சங்க கூட்டத்தை நடாத்துகின்ற இடத்தில் இவர் காணொளி எடுத்து எமது கூட்டத்தை குழப்பும் நோக்கத்தோடு செயற்பட்டதாலேயே இவரது கைபேசி தட்டி விடப்பட்டு அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மாறாக இவர் கூறுவது போன்று எவரும் அங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.