சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார்.
தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம்பிடித்தார்.
24 சதங்கள்
இந்திய அணிக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
68 டி20 போட்டிகளில் 1,759 ஓட்டங்களையும், 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ஓட்டங்களையும் தனதாகியுள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 24 சதங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இளம் வீரர்களின் வருகையால் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் தவிர்க்கப்பட்டு வந்த ஒரு வீரராக தவான் காணப்படுகிறார்.
இறுதியாக 2022இல் பங்களாதேஷிற்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தார்.
ஐ.பி.எல் தொடர்களில் டெல்லி , மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
இந்திய அணி
இந்த நிலையில், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், சர்வதேச போட்டிகள் மாத்திரம் இல்லாது உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை தவான் படைத்துள்ளார்.
2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அதிக ஓட்டங்களை இவர் பெற்றிருந்தார்.
ஐ.சி.சி. செம்பியன்ஸ் (2013,2017) தொடர்களில் அதிக ஓட்டங்களை குவித்து கோல்டன் பேட் விருதை வென்ற வீரராவார்.
மேலும், 2021ல் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருது இந்திய மத்திய அரசால் தவானுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.