இந்தோனேஷியாவில் (Indonesia) தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
பல இலட்சம் மக்கள் மலைப்பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் இவ்வாறான காலநிலையின் போது, பல உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன.
இந்தநிலையில், வடக்கு மலுகு மாகாணம் டெர்னேட் தீவில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின.
குறிப்பாக, ருவா எனும் கிராமத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அத்துடன், அங்கு பிரதான சாலை மற்றும் கிராமத்திற்கான தரைவழி தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ள பல வீடுகள், கட்டிடங்கள் சேற்றில் புதைந்துள்ள நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.