சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் (Valais) மாநிலத்தில் கிளைடர் (Glider) ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவமானது சிஸ்ட்ஹார்ன் (Chistehorn) பிக்டின் அருகில், நாய்டெர்கெஸ்ட்லின் (Niedergesteln) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(23) மதியம் இடம்பெற்றுள்ளது.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 72 மற்றும் 46 வயதுடைய இருவரே இதன்போது உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவித்ததை தொடர்ந்து அவசர சேவை ரீகாவிற்கு (Rega) தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏர் செர்மாட் (Air Zermatt) உலங்கு வானூர்தி மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவை வீரர்கள் கிளைடரில் உயிரிழந்த நிலையில் இருவரை மீட்டுள்ளனர்.
அத்துடன், இந்த கிளைடர், கடந்த வெள்ளிக்கிழமை(23) மதியம் 12.30 மணிக்கு ஆர்காவ் மாநிலத்தின் ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை குழு (Sust) இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதுடன் விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.