இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால் போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கான பிரசாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. போர் இடைநிறுத்தங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (உள்ளூர் நேரம்) நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவதி
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா பகுதியில் அவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகளுக்கு போலியோ ஏற்படும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் அறிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.