மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் ஜனாதிபதி தேர்தலுக்கான மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு நடவடிக்கைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வரையில் 46 தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் மட்டுமே மீறலாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் எந்த தேர்தல் வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லை.
வாக்களிப்பு நிலையங்கள் 81 வலயங்களாக செயற்படுத்தப்படுகின்றன.வாக்களிப்பு நிலையங்களின் தூரங்கள்,மக்கள் தொகைகளைக்கொண்டு இந்த வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதற்கு பொறுப்பாக வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நடவடிக்கைகள் 21ஆம் திகதி காலை 07மணி தொடக்கம் நடைபெறும் என கூறியுள்ளார்.
அலுவலகர்களுக்கான பயிற்சிகள்
இதற்காக அலுவலகர்களுக்கான பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் என்னும் இடமாற்றம்,பதிவு உயர்வு போன்ற முறைப்பாடுகள்,சுவரொட்டிகள் ஒட்டிய முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.சில இடங்களில் பொலிஸ் நிலையங்களுக்கு முன்பாகவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அது தொடர்பான விபரங்கள் கிடைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்டு அவை அகற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.