இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு 712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
மேலும் நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கூறினார்.