மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையும் பாதிக்கப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச தகவல் ஆய்வாளர் மோஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது ஆபத்தான பதில் தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி உள்ளது. அமெரிக்காவும் ஈரானுக்கு ஆபத்தான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு செய்ததனை போன்று ஈரானுக்கு செய்யப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டால் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் போக்குவரத்து பகுதிகள் மூடப்படும். இதனால் இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய நெருக்கடி ஏற்படும்.
மேலும் மத்திய கிழக்கில் போர் வெடித்தால் ஏதாவது ஒரு நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பலம்வாய்ந்த நாடுகளிடம் இருந்த இலங்கைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நியச் செலாவணி
இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணியும் கடுமையாகப் பாதிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால் அது இலங்கைக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச தகவல் ஆய்வாளர் மோகன் சமரநாயக்க தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் லெபனானில் மட்டும் தற்போது சுமார் 20,000 இலங்கையர்கள் பணிபுரிவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.