இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களை மாற்றுவதற்குத் தாம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
குருநாகலில் (Kurunegala) நேற்று (08.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தை தங்களது உறவினர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.
20க்கும் மேற்பட்ட வாகனங்கள்
அவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமென எண்ணுகின்றார்கள். நாட்டைக் கட்டியெழுப்பும் வரையில் தற்போதைய அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசியலமைப்பு மற்றும் சுற்றறிக்கை போன்றவற்றின் ஊடாக பல வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறானவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் சில சலுகைகளைப் பெற வேண்டுமாயின் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான நியாயமான காரணங்களை முன்வையுங்கள் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.