யாழ். புங்குடுதீவு பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக அரச வங்கிகளோ அல்லது தனியார் வங்கிகளோ காணப்படவில்லையென்றும் இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பாதிப்படைவதாக சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பிரமுகர் திரு. கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
சுமார் 13 கிலோமீற்றர் தூரம் பயணித்து வேலணை பிரதேசத்திலேயே வங்கிச் சேவைகளை பெற்றுக்கொள்ள முடிகின்றதென்றும்
மேலும், வங்கிச் சேவை மற்றும் ஏ.ரி.எம் எனப்படுகின்ற தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திர சேவை உள்ளூரில் காணப்படாமையினால் வர்த்தகர்கள் மாத்திரமன்றி நாளாந்த கூலித்தொழிலாளிகளும் சேமிப்பை மேற்கொள்வதற்குரிய எதுவித முறைமைகளுமில்லாது சிரமங்களை எதிர்கொள்வதாகவும்
குறைந்தபட்சம் ஏ.ரி.எம் எனப்படுகின்ற தானியங்கி இயந்திரமாவது புங்குடுதீவு பிரதேசத்தில் உடனடியாக அமைக்கப்படவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ் அத்தியாவசிய தேவை குறித்து புங்குடுதீவிலுள்ள பொது அமைப்புக்கள், பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் பல தடவைகள் வேண்டுகோளை முன்வைத்திருந்தபோதிலும் அவை செவிமடுக்கப் படவில்லை.
குறைந்தளவான பணத்தை பெற்றுக்கொள்ளவேண்டியிருந்தாலும் அதிகளவான பணத்தை செலவழித்து நீண்டதூரம் பயணிக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் புங்குடுதீவு மக்கள் காணப்படுவதனால் உடனடியாக நிரந்தரமாக ஏ.ரி.எம் இயந்திரம் அமைப்பதற்கு தேவையான இடத்தினையோ அல்லது கட்டிடத்தினையோ
புங்குடுதீவு சந்தையடி குறிகாட்டுவான் பிரதான வீதியில் அன்பளிப்பாக வழங்குவதற்கு தயாராகவே தனது குடும்பத்தினர் உள்ளதாகவும் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளதோடு 0778945856 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அரச அல்லது தனியார் வங்கிச்சேவை நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.