நீர்கொழும்பு புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏத்துகால பகுதியில் பாரியளவான கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேகநபரிடமிருந்து சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 35 கிலோ 565 கிராம் கஞ்சா தொகை கைப்பற்றப்படுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரைத் தவிர, சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், கஞ்சா வியாபாரத்தை நடத்துவதற்காக வாடகைக்கு வீட்டினை வழங்கிய உரிமையாளரான பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் ஏத்துகால பகுதியில் மாதம் நாற்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இந்தத் தொழிலை நடத்தி வந்ததுடன், பொலிஸார் அந்த இடத்தை சோதனை செய்த போது, விநியோகிப்பதற்காக கஞ்சா, பொதிகளாக தயார் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவுள்ளதுடன், நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகம் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.