நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் நேற்று (30) அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சில பிரதான வீதிகளில் மண்மேடு சரிந்து வீழந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா – ஹைபோரஸ்ட் பிரதான வீதிகளிலும் , புரூக்சைட் , மந்தாரம் நுவர மற்றும் கந்தப்பளை போன்ற பகுதிகளில் பல இடங்களில் பாரிய கற்கள், மண்மேடுகள், மரங்கள் சரிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.
எனினும் அந்தப் பிரிவுகளுக்கு உரித்தான பொலிஸாரின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி போக்குவரத்தை வழமை நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளனர்.
மேலும் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் அறுவடைக்கு தயாரான மரக்கறிகளும் அழிவடைந்து வருகின்றன.
மேலும் குறித்த பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாக அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்களும் மூழ்கும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.