அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை தூதுக்குழு, ஏப்ரல் 2 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் பரஸ்பர வரிகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை நிலையற்றதாக இருக்கும்போது, ஏற்றுமதி மீதான இத்தகைய வரிகளை இலங்கை தாங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது, ஆடைத் துறையின் 70 வீதத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன.
இதனால் அந்த நாடு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக மாறியது. இருப்பினும், கடந்த மாதம் கனடா, மெக்சிகோ, சீனா மற்றும் பல நாடுகள் மீதான புதிய அமெரிக்க வரிகள், இலங்கை போன்ற நாடுகளில் நன்மை பயக்கும் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்வனவாளர்கள், இப்போது தங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மதிப்பாய்வு செய்து, கொள்வனவுக் கட்டளைகளை மாற்றி வருவதே இதற்கான காரணமாகும்.
எனவே, இந்த விஜயத்தின் போது அமெரிக்க வர்த்தக அலுவலக உறுப்பினர்களுடன் வரிகள் தொடர்பான பிரச்சினை குறித்து விவாதித்து, நாட்டிற்கு நிவாரணம் பெற, இலங்கை அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என்று ஹேரத் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் செயற்படும் இலங்கை, அதிகரித்த வரிகளைத் தாங்க முடியாததால், வரி விலக்கு பெறும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.