உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பென்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை இன்றைய தினம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாநகர சபை வேட்பு மனு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரித்தால் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தின் கட்சிக்கே எமது ஆதரவை வழங்குவோம்.
அவர்களுக்கே வாக்களிக்குமாறு கோருவோம். தற்போதுள்ள தமிழ் தலைமைகளில் கஜேந்திரகுமார் பென்னம்பலமே விலை போகாதவராக இருக்கின்றார் எனவே அவருக்கே எமது ஆதரவை வழங்குவோம்.
ஆட்சியில் உள்ளவர்கள் எம்மை பார்த்து பயப்படுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் கூறாத விடயத்தை கூறியதாக கூறி எனது உரைகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளார்கள்.
அதேபோன்று எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நான் கோரிய போதிலும் எனக்கான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்த அருச்சுனா எம்பி , தனது உயிருக்கு சிறுபான்மை இனத்தவர்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார்.