எப்படியாவது லைஃபில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பது தான் பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கும். அதாவது வேலைக்கு செல்லாமல் இருந்தாலும் நிதி சிக்கல் எதுவுமே இல்லாமல் இருப்பது தான் இதன் நோக்கம். 60 வயதில் ஓய்வு பெற்ற பின் பணம் இருந்தும் வாழ்க்கையை என்ஜாய் செய்ய முடியாமல் போய்விடும்.
அதனால் இன்றைய இளசுகள் இளம் வயதிலேயே செட்டில் ஆகிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அதற்கே 45 வயதுக்கு மேல் ஆகிவிடுகிறது. அப்படி தான் பல கோடி மக்களின் ஆசையை அசால்டாக நடத்திக் காட்டியுள்ளார் ரஷ்யாவின் இளைஞர் ஒருவர்.
23 வயதிலேயே அவர் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம் என்பது தான் பலரையும் பிரம்மிக்க செய்துள்ளது. பாவெல் ஸ்டெப்சொன்கோ என்ற இளைஞர் தனது 16 வயதில் ரஷ்யாவின் உள்துறை அமைச்சகத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் படித்துள்ளார். 5 ஆண்டுகள் படித்த பின் ராணுவத்துக்கு சென்றுள்ளார்.
ரஷ்ய ராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட விதி இருக்கிறது. அதாவது ராணுவச் சட்டம் அமலில் இருக்கும் போது ராணுவ வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதம் வேலை செய்தால், அது 3 மாதமாக கணக்கில் வைத்துக் கொள்ளப்படுமாம். அதனால் 3 மாத சம்பளம் ஒரு மாதம் வேலை செய்தாலே கிடைத்துவிடும்.
ரஷ்ய ராணுவ சட்டப்படி ஒருவர் 6 ஆண்டுகள் வேலை செய்தால் மட்டுமே முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் ராணுவ விதி அமலில் இருந்ததால் பாவெல் ஸ்டெப்சொன்கோ இரண்டே ஆண்டுகளில் தேவையான கிரெட் தகுதியை பெற்றுள்ளார். இதனால் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் வயதில், இவர் தனது ஓய்வையே அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் சர்வதேச சாதனைகளை கண்காணிக்கும் அமைப்பு, இளம் வயதில் ஓய்வு பெற்ற பாவெல் ஸ்டெப்சொன்கோ-வுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இவ்வளவு இளம் வயதில் யாரும் ஓய்வு பெற்றது இல்லை என்பதே அந்த சாதனை. இவருக்கு சில கோடிகள் செட்டில்மெண்ட் தொகையும், வாழ்கை முழுவதும் பென்ஷனும் கிடைக்குமாம்.