தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (31.03.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (31) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், இந்த நிலைமை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கப்படலாம்.” இதற்கு பிரதான காரணம் பருவகால சூழ்நிலையாகும்.
இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அளவிற்கு இருக்கும், எனவே மக்கள், வெட்டவெளிகளில் வேலை செய்பவர்கள், போதியளவு திரவங்கள் மற்றும் நீரை அருந்த வேண்டும்.
முடிந்த போதெல்லாம், நிழலான இடத்தில் ஓய்வெடுக்கவும். நீங்கள் வெளிர் நிற ஆடைகளை அணியலாம். “நோயுற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டின் பல பகுதிகளில் நாளை (31) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (30.03.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மனித உடலால் உணரப்படக்கூடிய அளவிற்கு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வெப்பமான வானிலை காரணமாக வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.