நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் (Excise Department of Sri Lanka) அறிவித்துள்ளது.
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்பட வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இந்த காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1913 என்ற இலக்கத்துக்கு அழைத்து தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் குறித்த இலக்கம் 24 மணிநேரமும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நாட்களில், சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மதுபானம் வழங்க முடியும் என்றும் மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உணவகங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமான முறையில் காணப்படுவதில்லை எனவும், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் தரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.