எல்ல – வெல்லவாய வீதியில் 15 உயிர்களை காவுகொண்ட பேருந்து விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில், அரச பகுப்பாய்வாளர் துறையின் நிபுணர்கள், இன்று விபத்து நேர்ந்த பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எல்ல- வெல்லவாய வீதியின் 24 ஆவது மைல்கல் பகுதியில் கடந்த 4ஆம் திகதி பேருந்தொன்று விபத்துக்குள்ளானது.
எதிர் திசையில் பயணித்த ஜீப்பின் பின்புறத்தில் மோதுண்ட குறித்த பேருந்து, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை உடைத்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்தே இந்த விபத்தில் சிக்கியது.
32 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்களில் 13 பேர் தொடர்ந்தும் பதுளை போதனா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், பேருந்து அதிக வேகம் காரணமாக பாதுகாப்பு வேலியை உடைத்து பள்ளத்தில் வீழ்ந்திருக்கலாமென காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



















