மதுரையைச் சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு நடனமாடுவதில் பிரபலமானார்.
அதனால், ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார்.
தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களைப் போல மிமிக்ரி செய்தும் தனது ஸ்டாண்ட் அப் காமெடியாலும் கவனம் பெற்றார்.
இவரும் சுட்டி அரவிந்தும் சேர்ந்து செய்த நகைச்சுவை வெகுவாகப் பிரபலமானது.
தனது அபாரமான மிமிக்ரி திறமை மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற ரோபோ சங்கர், 1997 ஆம் ஆண்டு ‘தர்ம சக்கரம்’ படம் மூலம் வெள்ளித் திரையில் கால் பதித்தார்.
எனினும் பல ஆண்டுகள் கழித்தே, ’தீபாவளி’ படத்தில் கதாநாயகன் ரவி மோகனின் நண்பராக நடித்து கவனம் ஈர்த்தார்.
விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், சூர்யாவுடன் சிங்கம்-3, தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார்.
விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தேசிங்குராஜா, வாயை மூடி பேசவும்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன.
சினிமா உலகில் பயணிக்கத் தொடங்கியபோது ரோபோ சங்கருக்கு இருந்த ஆசை, கடைசி வரை நிறைவேறாமல் போனது.
ரோபோ சங்கர் சிறுவயது முதலே கமல்ஹாசனின் தீவிர ரசிகராகவே வளர்ந்தார்.
கமல் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படத்தையும் முதல் நாளே திரையரங்கில் பார்த்துவிடுவார் என்பது அவர் வாழ்நாளில் தவறவிடாத பழக்கம்.
குறிப்பாக ஆளவந்தான் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்காக அவர் மொட்டை அடித்து திரையரங்கிற்குச் சென்ற சம்பவம் அவரது கமல் மீது கொண்ட தீவிரத்தை வெளிப்படுத்தியது.
ஒரு பேட்டியில், “என்னைவிட பெரிய கமல் ரசிகன் எவரும் இல்லை, கமலைப் பற்றிய தகவல் என்னை விட வேறு யாருக்கும் தெரியாது” என்று பெருமிதத்தோடு கூறியது மட்டும் இல்லாமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் மணிகண்டனை விவாதத்திற்கு அழைத்திருந்தார்.
கமலின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரோபோ சங்கரின் வாழ்த்து சுவரொட்டிகளை சென்னையின் எல்லா பகுதிகளிலும் பார்க்க முடியும்.
ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கருக்கு இறுதி வரை அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே மறைந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் அருகிலுள்ள மலிவான வீடுகள் – உங்களுக்கு பொருந்தக்கூடிய விளம்பரங்களை பாருங்கள்
ரியல் எஸ்டேட் | தேடல் விளம்பரங்கள்
|
Sponsored
மேலும் அறிக




















