வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தந்தை மீது மிளகாய்ப் பொடி தூவி, 4 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முன்பள்ளி சென்றுவிட்டு, வீடு திரும்பிய 4 வயது சிறுவனை, அடையாளம் தெரியாத நபர்கள், சிற்றூந்தில் கடத்திச் சென்றுள்ள சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வீதியில் காரை நிறுத்திவிட்டு வந்த கடத்தல்காரர்கள், தந்தை மீது மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு, அவரிடமிருந்த சிறுவனை சிற்றூந்தில் கடத்திச் சென்றனர்.
கர்நாடக பதிவு எண் கொண்ட சிற்றூந்தில் வந்த நபர்கள் யார் என்பது குறித்தும், கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் குறித்தும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவனைக் காப்பாற்ற ஓடிச் சென்ற தந்தையை, சிற்றூந்துடன் இழுத்துச் சென்ற காணொளியும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், கடத்தல்காரர்கள் வந்த சிற்றூந்தின் பதிவு எண் போலியானது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















