2009 மே மாதத்திற்கு முன்னர் இராணுவத்தினர் செய்த தியாகங்களை நினைத்துப் பார்க்க வேண்டும், அத்துடன் இனி வரும் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முறையான பயிற்சி மூலமே உள்ளக அல்லது வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும். அதன் மூலம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்புத் தேவைகளை அமுல்படுத்துவதில் இராணுவம் அதிக முன்னுரிமையை வழங்க வேண்டும்.
நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் அதிகளவான உதவிகளை செய்தனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இன்றுவரை இராணுவம் சம்பாதித்துள்ள நல்ல பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொழில்முறை மற்றும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை நாம் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.