புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எட்டாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்போது, சிம்மாசன உரை நிகழ்த்தும் ஜனாதிபதி தனது கொள்கை அறிவிப்பை வெளியிடவுள்ளார். அந்த கொள்கை அறிவிப்பை தொடர்ந்தே தமது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புத்தாண்டில் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசாங்கத்தரப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் எமது செய்தி சேவை கேட்டபோது , இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாளை அல்லது நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதன்போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.