“இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வெளிநாடுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் தீவிர கண்காணிப்புக்குள் இந்த நாடு உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பிறந்துள்ள புதிய ஆண்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான – நீதியான அரசியல் தீர்வை காலதாமதமின்றி ராஜபக்ச அரசு வழங்க வேண்டும்.
2019ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு திருப்தி தரக்கூடிய விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை.
எனினும், தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட கொள்கையில் உறுதியுடன் ஓரணியாக நின்று உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தைத் தொடர்கின்றார்கள்.
நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால், தமிழ் மக்களுக்கு நன்மை தரும் கருமங்கள் எதையும் இந்த அரசு இன்னமும் முன்னெடுக்கவில்லை.
தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை இந்த அரசு வழங்கியே தீர வேண்டும். அதற்கு முன்னர் அரசியல் தீர்வுத் திட்டத்தை இந்த அரசு முன்வைக்க வேண்டும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இவை தொடர்பில் ராஜபக்ச அரசின் நிலைப்பாட்டை அறிய எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்” – என்றார்.