பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், செயற்படும் தேசிய ஹஜ் குழு இலங்கை ஹஜ் யாத்ரிகர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் அமைப்பாக செயல்படும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஹஜ் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரடையாட சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்து நாடு திரும்பிய இலங்கை ஹஜ்குழுவின் தலைவர் மொஹமட் பலீல் மர்ஜன் அஸ்மி பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இதனைதொடர்ந்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹஜ் கமிட்டி ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக செயல்பட வேண்டும் என்பது பிரதமரின் விருப்பமாகும். அதன் குறிக்கோள் சேவை மட்டுமே. ஹஜ் கடமைக்காக சவூதிக்கு செல்லும் இலங்கையர்கள் குறைந்த கட்டணத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியுமான அனைத்து வசதிகளையும் இந்த குழு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அத்துடன் கடந்த ஆண்டு ஹஜ் கடமையை மேற்கொள்ள ஒவ்வொரு யாத்ரிகருக்கும் 7 இலட்சம் ரூபாவரை செலவிடவேண்டிய நிலை இருந்தது. யாத்ரிகர்களின் ஹஜ் விவகாரங்கள் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் தற்போது பிரதமரின் கீழ் இருக்கும் மத விவகாரங்கள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஹஜ் குழு மூலம் ஹஜ் செயல்திறன் எளிதாக்கப்படுகிறது.
இலங்கை ஹஜ் யாத்ரிகர்கள் தொடர்பான சேவைகளை திருப்திகரமாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் இந்த குழு ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.