குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்ட பின் ஈரான் மற்றும் அமெரிக்காவிடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இந்தியாவிற்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் சிறப்பு ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி,அமெரிக்க ராணுவ படைகளால் படுகொலை செய்யப்பட்டது காரணமாக அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகமாகியுள்ளது.
இரண்டு நாடுகளுமே பொறுமை காக்கவில்லை என்றால், இந்த இரண்டு நாடுகளுக்கு மட்டுமின்றி உலகநாடுகள் சிலவற்றிற்கும் பாதிப்பு வரும் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவிற்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், உலகில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வதில் ஈரான் நாட்டிற்கு பெரும் பங்கு உள்ளது.
அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரான் தொடர்ந்து முதல் 3 இடங்களில் உள்ளது, தற்போது அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.
இது இந்தியாவில் இருக்கும் அடித்தட்டு மக்கள் வரை பாதிக்கும் அபாயம் உள்ளது. அப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும், இதன் காரணமாக பண வீக்கம் அதிகரித்து, இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படலாம்.
தற்போது மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் அனைத்தும் திடீரென விலை குறையத் தொடங்கின . நாட்டின் பங்குசந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 32 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 8 காசாக உள்ளது.
இந்தியா ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்காவின் மோதலால் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.