ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதரகத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டது. இதையடுத்து, அமெரிக்கா – ஈரான் இடையே போர் உருவாகும் சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீது எந்த தாக்குதலையும் நடத்த விரும்பவில்லை. ஆனால், அந்நாடு செய்த செயலுக்கான பலனை அவர்கள் கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என கூறினார்.
அவர் பேசிய சில மணி நேரத்தில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ராக்கெட்கள் வெடித்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்ற பெரிய கேள்வி எழுந்தது.
ஆனால் ராக்கெட் தாக்குதலில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதிப்படையவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் குவாசிம் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்கா பாதுகாப்பாக உள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கூறியுள்ளார்.