மத்திய கிழக்கில் போர் மூளும் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா ஐ.நா-விடம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018ம் ஆண்டு அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்த நாள் முதல் மத்திய கிழக்கில் பதட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதாக ஆர்வலர்கள் எச்சரித்தனர்.
எனினும், இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என எச்சரித்த ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி பழிக்குப் பழி வாங்கியது.
இரு நாடுகளின் மோதலால் ஈராக் கடுமையாக பாதிப்புக்குள்ளானதால், நாட்டில் உள்ள வெளிநாட்டு படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என அந்நாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் படி ஜேர்மனி, கனடா உட்பட நேட்டோ உறுப்பு நாடுகள் ஈராக்கை விட்டு படைகளை வெளியேற்றுவதாக அறிவித்தனர். ஆனால், ஈராக்கை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறாது என டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
எனினும், அமெரிக்க படைகள் மத்திய கிழக்கை விட்டு வெளியேறினால் தான் பிரச்சனை முடிவுக்கு வரும் என ஈரான் எச்சரித்தது. மேலும், அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எண்ணம் இல்லை என அறிவித்தது.
ஈராக்கில் உள்ள இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப அறிவித்துள்ளார்.
மேலும், ஈராக்கில் பதட்டத்தை குறைக்க அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஜேர்மனி உட்பட உலக நாடுகள் இரு தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், எந்தவொரு முன்நிபந்தனையும் இல்லாமல் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக அமெரிக்கா ஐ.நா-விடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் முன்வருமா என்பது கேள்விக்கு குறியாக உள்ளது.