ஒரு மாத காலப்பகுதிக்குள் காலிமுகத்திடல் கரையோரம் மற்றும் நடைபாதை மின்குமிழ்கள் மூலம் ஒளியூட்டம் செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் காலிமுகத்திடலிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் அங்குள்ள நடைபாதை மற்றும் கடற்கரையினை சூழவுள்ள இருளான பகுதியை ஒளியூட்டுவதற்கு அதிகாரிகளிற்கு ஆலோசனை வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனதிற்கு ரம்மியமான இடமாக மாற்றியமைக்கும் பொருட்டு இப்பகுதியை ஒரு மாத காலத்திற்குள் மின்விளக்குகளை கொண்டு ஒளியூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
அதன் அடிப்படையில் இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனம் (SLMPCS) இந்நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்வதாக எமக்கு அறிவித்துள்ளது.
அழகான நாடொன்றை உருவாக்கும் முகமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு முன்னுரிமை அளித்து இச்செயற்பாட்டினை மிக விரைவாக முன்னெடுக்க உள்ளோம்.
அதன் கீழ் காலிமுகத்திடலிலுள்ள நடைபாதை, கரையோரம் மற்றும் காலிமுகத்திடலில் நிலவும் காற்றழுத்தம் ஆகியவற்றை கவனத்திலெடுத்து ஒரு மாத காலப்பகுதிக்குள் இவ்வொளியூட்டல் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.
இத்திட்டத்தின் பொழுது சூரிய சக்தியை கொண்டு இயங்கும், சுற்றுபுறச் சூழலிற்கு உகந்த மின்விளக்குகளை உபயோகிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் என்பது மக்கள் நிரந்தரமும் கூடும், ஓய்வு நேரத்தை கழிப்பதற்கு வருகைத்தரும், உடற்பயிற்சிகளில் ஈடுப்படும் இடமாகும். இக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இவ்விடத்தின் சுற்றுப்புற அழகை கண்வர் வகையில் மேம்படுத்தவும், மாலை வேளையில் இப்பிரதேசத்தை ஒளியூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.