எங்களின் முக்கிய தளபதியை பறிகொடுத்துவிட்டு பழிவாங்காமல் விட்டுவிட முடியுமா என ஈரானின் மூத்த தளபதி ஒருவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் இரண்டு ரணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று அதிரடி ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்தது.
ஆனால் இந்த தாக்குதல்களில் ஆள் அபாயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், ராணுவ தளத்தின் முக்கிய பகுதியில் சேதம் ஏற்பட்டது என உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் தனது முடிவில் இருந்து கீழிறங்கியுள்ளது எனவும், போருக்கான எந்த சூழலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஈரானின் மூத்த தளபதிகளில் ஒருவரான அப்துல்லா அரகி, டிரம்பின் கூற்றை புறந்தள்ளியதுடன், அமெரிக்காவால் ஈரான் பேரிழப்பை எதிர்கொண்டுள்ளது. அதற்கு பதிலடி தராமல் ஓயப்போவதில்லை.
போருக்கான சூழல் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை தாங்கள் பதிலடி தருவதை தொடங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை தாக்குதலானது தங்களின் ராணுவ பலத்தை உணர்த்துவது எனவும், அமெரிக்கா திணறியது எனவும் அலி ஃபதாவி என்ற ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.