யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த சுவரோவிய புலியையும் அவர்கள் அழிக்க வைத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபயவின் எண்ணக்கருவுக்கமைய நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் ஆர்வமுடன் கீறி வருகின்றனர். அதற்கு பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலி ஒன்றின் படத்தினை சுவரோவியமாக வரைய முனைந்துள்ளனர்.
அவர்கள் புலியின் படத்தினை வரைந்து கொண்டிருந்த வேளை அங்கு பொலிஸாருடன் சென்ற புலனாய்வு பிரிவினர் யாரின் அறிவுறுத்தலின் கீழ் பிலியின் உருவத்தினை கீறுகிறீர்கள் ? என அச்சுறுத்தும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதோடு உடனடியாக கீறிய படத்தினை அழிக்க கூறியதுடன் , படம் அழிக்கும் மட்டும் அவ்விடத்தில் தரித்து நின்று , செல்லும் போது அவ்விடத்தில் நின்ற இளையோர் மற்றும் படம் வரைந்தவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றையும் பதிவு செய்து சென்றுள்ளனர்.
இதேவேளை தென்னிலங்கையில் போர் வெற்றி சின்னங்கள் மற்றும் இராணுவத்தினரின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ள நிலையில், வடக்கில் ஒரு புலியின் ஓவியத்தை வரைய முனைந்ததற்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.