மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபியின் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிங்கள தாய்மார்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக அடிப்படைவாதிகளாக குற்றம் சுமத்தப்பட்டு சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மருத்துவர் ஷாபியை சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சுக்கு வழங்கிய பரிந்துரையை உடனடியாக திரும்ப பெறுமாறு ஜனாதிபதி அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவர் மொஹமட் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டு சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் ஊடக புதிய விசாரணைகளை ஆரம்பிக்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியிலேயே அரச சேவைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை சுயாதீன ஆணைக்குழுக்களை கலைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.