தர்ம தீவை உருவாக்குவதாக கூறி அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் குரல் பதிவு தொகை ஒன்றை கண்டுபிடித்து தற்போது சேறுபூசும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
காய்கறி உட்பட அத்தியவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
குரல் பதிவுகளை வைத்துக்கொண்டு அரசாங்கம் துள்ளுகிறது. அரசாங்கம் சேறுபூசும் தொழிற்சாலையாக மாறியுள்ளது. அருவருப்பாக உள்ளது. தர்மதீவை உருவாக்க போவதாக கூறியே வந்தனர்.
ஆனால், அனைத்து தொலைக்காட்சிகளிலும் குரல் பதிவுகளை வெளியிடுகின்றனர். அவற்றில் சிலவை ஆபாசமானவை.
இது சரியா என கேட்கிறேன். இது புதுமையானது அல்ல. ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் ஊ சத்தத்திற்கு மத்தியிலேயே ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்தார். இப்படி ஆரம்பித்த வேலை சாத்தியமாகாது.
பதவிப் பிரமாண நிகழ்வுக்கு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, எமது பிரதிநிதிகள் அங்கு செல்லும் போது ஊ சத்தமிட்டே வரவேற்றனர்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறைகேள் அதிகாரியை போன்றவர் என்பதுடன் அந்த பின்னணியை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எமக்கு தினமும் அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வரும். அனைவரும் எங்களிடமே தமது குறைகளை கூறுவார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பொலிஸார், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் ஏன் நீதிபதிகள் கூட பேசுவார்கள். அவர்களுக்கு அநீதி ஏற்பட்ட அதனை நாடாளுமன்றத்தில் கூறுமாறு எங்களிடமே தெரிவிப்பார்கள் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.