தமது தேவைகளை உடனடியாக நிறைவேற்றியமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு அக்கராயன் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, அக்கராயன் – கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தமது நன்றிகளை கூறியுள்ளனர்.
கரித்தாஸ் குடியிருப்பு கிராமத்தின் உடனடித் தேவைகளான இரண்டு பிரதான வீதிகள் மற்றும் மைதானம் புனரமைப்பு, ஆலயம் புனரமைப்பு மற்றும் பொதுக்கிணறு ஒன்றின் தேவை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரை நேரில் அழைத்து மக்கள் தெரிவித்திருந்தனர்.
அதற்கமைய அவர் பிரதான வீதிகளின் புனரமைப்பிற்காக 40 இலட்சம் ரூபாவும், மைதான புனரமைப்பிற்கு 6 இலட்சம் ரூபாயும், ஆலய புனரமைப்பிற்கு 5 இலட்சம் ரூபாயும், 4 இலட்சம் ரூபாய் செலவில் பொதுக்கிணறும் என மொத்தமாக 55 இலட்சம் ரூபாய் கரித்தாஸ் குடியிருப்பு கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
அந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்பொழுது நிறைவடைந்துள்ள நிலையிலேயே சிறீதரனுக்கு மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
அக்கராயன் விளையாட்டு கழகத்தின் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் விஜயன் அகிலன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.