மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் காட்டுப்பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களால் சித்திரவதைக்கு உள்ளான மேலும் 14 பேரை விடுவித்துள்ளனர்.
தலைநகர் பனாமா சிட்டியில் இருந்து சுமார் 155 மைல்கள் தொலைவைல் உள்ள காட்டுப்பகுதியில் மத அடிப்படைவாத கும்பல் ஒன்று சாத்தான் பூசை மேற்கொண்டுள்ளது.
இதில் பங்கேற்ற கிராம மக்களை தங்கள் பாவங்களில் இருந்து விடுவிக்கும் நோக்கில் குறிப்பிட்ட மத குருக்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கிராம மக்களை அடித்து, சிலரை உயிருடன் நெருப்பில் தள்ளி, கூரான கத்தியால் தாக்கவும் செய்துள்ளனர்.
இதில் இருந்து தப்பிய 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே சம்பவப்பகுதிக்கு பொலிசார் விரைந்துள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்த கோவில் ஒன்றில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
இதில் 5 பேர் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் பிள்ளைகள் எனவும் தெரியவந்துள்ளது.
விடுவிக்கப்பட்ட 14 பேரில் இருவர் கர்ப்பிணி பெண்கள் எனவும் பலருக்கும் ஆழமான காயங்கள் இருந்துள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதான 10 பேரில் ஒருவர், கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.