ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது டிரம்ப் அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள் என ஈரானிய உன்னத தலைவர் அலி காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் ராணுவ தலைமைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இது ஈரான் அரசை கவிழ்க்கும் புரட்சி என நாட்டைவிட்டு வெளியேறிய பட்டத்து இளவரசர் ஒருவரும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் முதன் முறையாக வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னெடுத்து நடத்திய ஈரானின் உன்னத தலைவர் அலி காமேனி,
அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரானால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணை தாக்குதலானது அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள் என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி அந்த நாளானது கடவுள் குறித்த தினம் எனவும் அலி காமேனி குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு கடவுளின் கரத்தின் வலிமையை ஈரான் உணர்த்தியுள்ளதாகவும் அலி காமேனி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களானது, தளபதி குவாசிம் சுலைமானியின் வீர தீர செயல்களை கொச்சைப்படுத்தும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, குவாசிம் சுலைமானியை படுகொலை செய்ததன் மூலம் அமெரிக்க அரசு நிர்வாகம் தன்மீதே கறையை பூசிக்கொண்டுள்ளது என்றார் அலி காமேனி.
பிராந்தியத்தின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் குவாசிம் என புகழாரம் சூட்டிய அலி காமேனி, தீவிரவாதத்தை முன்னணியின் நின்று எதிர்த்து போராடிய வீரன் எனவும் புகழ்ந்துள்ளார்.
வல்லரசு நாடுகள் குறிப்பிடுவது போல குத்ஸ் படைகள் பயங்கரவாத இயக்கமல்ல என குறிப்பிட்ட அலி காமேனி,
அது மனித விழுமியங்களைக் கொண்ட மனிதாபிமான அமைப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய மக்களை ஆதரிப்பது போன்று வேஷமிடும் டிரம்ப் உண்மையில் ஒரு கோழை என குறிப்பிட்ட அலி காமேனி,
அவர் ஈரானிய மக்களை நம்பவைத்து ஏமாற்றுவார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை என்றார் அலி காமேனி.