எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசன பங்கீடு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர்களுள் பெண் வேட்பாளர் ஒருவரை உள்ளடக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.
அதனடிப்படையில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், மாவட்டத்தின் பொது அமைப்புக்கள், மாதர் சங்கம், தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவை பெற்ற முன்னணி சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான மங்களேஸ்வரி சங்கர் களமிறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மங்களேஷ்வரி சங்கர் அனைவராலும் அறியப்படும் ஒருவராக மாறியிருக்கின்றார்.
மனித உரிமைகள் தொடர்பான விவாதங்கள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கென அவர் ஒரு வருடத்தில் பல முறை ஜெனிவா சென்று வருவதுடன் நியூயோர்க்கில் இடம்பெறும் மனித உரிமை அமர்வுகளிலும் கலந்து கொள்கின்றார்.
முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் சட்டத்துறை சார்ந்த, சர்வதேச இராஜதந்திரிகளால் நன்கு அறியப்பட்ட பலரின் ஆதரவையும் பெற்ற ஒரு பெண் வேட்பாளர் களமிறங்குவதை பலரும் வரவேற்கின்றனர்.
இது தொடர்பில் ஆரம்ப கால தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவராக திகழ்ந்தவரின் நெருங்கிய உறவு முறையான ஒருவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு, பட்டிருப்புத் தொகுதி தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. மங்களேஷ்வரி போட்டியிட வேண்டும் என மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் – மாதர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்று அவர் முன்வருவாராக இருந்தால் இன்றைய சூழலில் அது மிகவும் வரவேற்கத்தக்க பொருத்தமான தெரிவு ஒன்று என குறிப்பிட்ட அவர்
இது பரிசீலணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று அல்ல. அவர் நேரடியாக போட்டியிடலாம் என சம்பந்தன் அதற்கு பதிலளித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நண்பர் உறுதிப்படுத்தினார்.