பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவதற்கான அரசாங்க அனுமதி பத்திரம் பெற்றுள்ளமையை தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி வரவேற்பதாக முன்னணியின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்க முன்னணியின் பொங்கல் விழா நிகழ்வில் இன்று கலந்துகொண்டு பின்னர் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் மார்ச் முதலாம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தமை வரவேற்கத்தக்கது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு தடையாக இருந்து வரும் கூட்டு ஒப்பந்தத்தை முற்றாக நீக்கி இனி வரும் காலங்களில் அரசாங்கத்தினூடாக சம்பளம் உயர்வினை வழங்க வேண்டும்.
இதுவரை காலமும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கு கூட்டு ஒப்பந்தம் தடையாக இருக்கின்ற நிலையில் ஆயிரம் ரூபாய்
அடிப்படை சம்பளமாக எவ்வாறு அரசாங்கம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை அறிய மக்கள் ஆவலாக உள்ள நிலையில், அதனை தெளிவுபடுத்த அரசு முன்வர வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கம் / முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன்,எம்.உதயகுமார், சரஸ்வதி, சிவகுரு, பிரதேசசபை உறுப்பினர்கள், தேசிய அமைப்பாளர் ஜி நகுலேஸ்வரன், மகளீர் அணித்தலைவிகள், அமைப்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள்உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.