இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு 355 கோடி ரூாப நிதி உதவியை மத்திய அரசு அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.
இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை, அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கைச் சிறையில் அடைப்பதும், துன்புறுத்துவதும், மீன் பிடிப்படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.
மேலும், இலங்கையில், தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள், வீடுகள் உள்ளிட்ட உடைமைகளையும் பறித்து, இராணுவம் முகாம் அமைத்து, தமிழர்கள் 24 மணி நேரமும் திறந்தவெளிச் சிறையில் இருப்பதைப் போன்று கட்டுக்காவல் ஏற்படுத்தி இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வரும் இந்திய அரசு, தமிழக மக்களின் வரிப் பணத்திலிருந்து சிங்களக் அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்.
எனவே, இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்க 355 கோடி ரூபா நிதி உதவி அளிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.