ஈரானிய ஏவுகணை தாக்குதலில் சிக்கி காயமடைந்துள்ள அமெரிக்க ராணுவத்தினர் சிகிச்சை தேடும் பொருட்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானிய தளபதி சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி தருவம் வகையில் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்தது.
இந்த தாக்குதலில் ஆளபாயம் ஏதும் இல்லை என அமெரிக்க அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
பின்னர் 11 அமெரிக்க ராணுவத்தினருக்கு லேசான காயம் என தகவல்கள் கசிந்தன. ஆனால் அந்த 11 பேருக்கும் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி மேலும் பல அமெரிக்க ராணுவத்தினர் சிகிச்சை பெறும் பொருட்டு, ஜேர்மனி சென்றுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் 11 பேர் மட்டுமே ஜேர்மனிக்கு சிகிச்சை தொடர்பில் பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில்,
ஜனாதிபதி டிரம்ப் குறித்த தகவல்களை மறுத்துள்ளார். ஈரானிய ஏவுகணை தாக்குதலால் அமெரிக்க ராணுவத்தினருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தாம் கருதவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைவலி போன்ற மிக சாதாரணமான அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என கூறியுள்ள டிரம்ப்,
என்னால் உறுதியாக கூற முடியும், இதுவொன்றும் மிகவும் தீவிரமானது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில்,
கடந்த 2000 ஆண்டு முதல் அமெரிக்க ராணுவத்தினரில் சுமார் 408,000 பேருக்கு மூளையில் காயம் அல்லது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.